சென்னை,
2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.
இவர் தற்போது, கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் '29' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.