சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'டிரெயின்' பட டிரெய்லர் வெளியானது

சுருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

வரும் டிசம்பர் 4-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் வெளியீடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிரெயின்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சுருதிஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யூகி சேது, நரேன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார்.

ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் மர்ம சம்பவங்கள்

ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் டார்க் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காகக் காத்திருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான 'கன்னக்குழிக்காரா' வெளியானது. மிஷ்கின் இசையமைத்துள்ள இப்பாடலை சுருதிஹாசன் பாடியுள்ளார். கபிலன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

வெளியானது டிரெய்லர்

இப்படத்தின் படப்பிடிப்புத் தள அனுபவங்களைப் பகிரும் வகையில் படக்குழு வெளியிட்ட பி.டி.எஸ். வீடியோவும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக வடிவமைக்கும் விதமும், விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது 'டிரெயின்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மர்மம், பதற்றம் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வரும் டிசம்பர் 4-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் வெளியீடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT