சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் கூலி படத்தில் ஏஐ உதவியுடன் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், படம் பார்த்து தான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது என்னை பொருத்தவரை சரியானது இல்லை. ஒரு சினிமா நம்மை இன்ப்ளூயன்ஸ் செய்தால் நாம் வளர்ந்த விதமே தவறாகிவிடும். அப்பா, அம்மா இருக்கும்போது ஒரு படம் நம்மை எப்படி மாற்றிவிடும்?. படம் என்பது ஒரு பொழுதுபோக்கு தான். ஒரு படம் நம்மை சிந்திக்க வைக்கலாம் ஆனால் அது மட்டுமே போதாது.
சினிமா துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருக்காது. ஆனால் உதவி இருக்கும். ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். தொழில்நுட்பங்கள் அதை பயன்படுத்திக் கொள்பவர்களை பொருத்து அமைகிறது. புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது முதலில் வெளியில் இருந்து பார்ப்போம், பிறகு நாம் பழகிக் கொள்வோம். தொழில்நுட்பத்தை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பது நம்முடைய கையில்தான் உள்ளது." என்று பேசினார்.