சினிமா செய்திகள்

இளைய தலைமுறையினரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது - குஷ்பு

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் சினிமாவுக்கு நல்லது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்புவின் மகள் அனந்திதா தயாரித்து, அஷ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'டபுள் ஆக்குபன்சி' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சென்னையில் நடந்த பட விழாவில் குஷ்பு பேசும்போது, "வாழ்க்கையில் ஒரு வெறித்தனம் இருக்கும்போது வெற்றி நம்மை தேடி வரும். என் மகள் தயாரிப்பாளராக களமிறங்கியது பெருமை தருகிறது. இது இளைஞர் படை. இப்போதுள்ள தலைமுறையினரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. தலைமுறை இடைவெளி என்றெல்லாம் இங்கு கிடையாது. இதில் தவறும் கிடையாது.

எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் படம் நடிக்கிறார். இன்னொருவர் படம் தயாரிக்கிறார். இப்போதைக்கு குடும்ப நலனை கவனிக்கிறேன். அதேவேளை தெலுங்கில் 3 படங்கள் நடிக்கிறேன். தமிழில் நல்ல வாய்ப்புகள் வரட்டும். நிச்சயமாக நடிப்பேன்.

நானும், விஜய்யும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும், அக்கா - தம்பி பாசம் என்றைக்குமே மாறாது. தற்போது தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி தந்திருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய். சினிமாவில் இருந்து சென்றவர் என்பதால், இங்கிருக்கும் கஷ்டம் அவருக்கு புரிந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. தயாரிப்பாளர்கள் இங்கே நன்றாக இருந்தால்தான் சினிமாவுக்கும் நல்லது", என்றார்.