சினிமா செய்திகள்

ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் எனக்கான இடம் - நடிகை ராதிகா

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’ நேற்று வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படம் நேற்று வெளியான முதல் நாளே ரூ.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி விருதுநகர் திரையரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராதிகா, ரசிகர்கள் மத்தியில் மேடையேறி பேசினார். அப்போது அவர், “படத்தை ரசித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால், அதை கேட்கவே எனக்கு மிகுந்த சந்தோஷம். ஏனெனில் இக்காலத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே, அதே நேரத்தில் ஒரு கருத்தையும் சொல்லும் தரமான படங்கள் அரிதாகவே வருகின்றன. அப்படி ஒரு நேரத்தில் இந்த படம் வந்திருக்கிறது என்பதில் உண்மையாகவே மகிழ்ச்சி இருக்கிறது. அதற்குக் காரணம் முக்கியமாக எங்கள் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.

இதில் நடித்திருப்பவர்கள் பலரும் திறமையானவர்கள். இப்படிப்பட்ட கதையை எடுக்கத் துணிச்சல் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படம் வெற்றிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் திரையரங்குக்கு வந்து ரசிகர்களைச் சந்தித்தது பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியாக ‘மூன்று முகம்’ படத்தின் போது ரஜினிகாந்துடன் மதுரைக்கு வந்தது நினைவுக்கு வருகிறது.

இன்று இங்கே வந்து உங்கள் சந்தோஷமான முகங்களைப் பார்க்கும்போது எனக்கு பெருமை. இந்தப் படம் நல்ல படம் என்று உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள். இந்தப் படம் முடியும் போது நான் ஏன் இதில் நடித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு பெண்ணாக, இவ்வளவு ஆண்டுகள் இந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த சினிமா துறையில் நான் நிலைத்து நிற்கிறேன். அது எளிதல்ல. ஆனால் என் மீது உள்ள நம்பிக்கையால், எனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டேன். அதில் எனக்கு பெருமை உண்டு. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ‘உங்கள் அப்பா போலவே பேசுகிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அது எனக்கு மிகப் பெரிய பெருமை.” என்றார்.