சினிமா செய்திகள்

"திரையுலகில் ஓட்டப்பந்தயம் இல்லை" - சமந்தா பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்

சமந்தா, தனது வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்து மனம் திறந்தார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் பிஸியாக செயல்பட்டு வருகிறார்.

சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'மா இன்டி பங்காரம்' வருகிற 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

"சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என நினைத்தேன்"

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசிய சமந்தா, தனது வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்து மனம் திறந்தார். அவர் கூறுகையில், "முன்பெல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என்று நினைத்தேன். அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், போட்டியில் வெற்றி பெற வேண்டும், இறுதிக் கோட்டை முதலில் தொட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது" என்றார்.

"நாம் அடைய வேண்டிய எல்லைக் கோடு எதுவும் இல்லை"

தொடர்ந்து பேசிய அவர், "காலப்போக்கில் அப்படி ஒரு பந்தயமே இல்லை என்பதை உணர்ந்தேன். வாழ்க்கையிலும், திரையுலகிலும் நாம் சென்று பிடிக்க வேண்டிய இறுதி எல்லைக் கோடு என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பயணம் தனித்துவமானது. அந்த பயணத்தை ரசித்தபடியே முன்னேற வேண்டும் என்பதையே இப்போது புரிந்துகொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

சமந்தாவின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மயோசிடிஸ் பாதிப்புக்குப் பிறகு வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்க கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.