சினிமா செய்திகள்

சினிமா துறையில் பாலியல் சுரண்டல் இல்லை - நடிகர் சிரஞ்சீவி

சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் 15 நாட்களில் ரூ.358 கோடி வசூல் செய்துள்ளது.

அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார். அனில் ரவிபுடிவின் 9வது படமாக ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’ கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ.358 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் ‘மன சங்கர வர பிரசாந்த் காரு’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிரஞ்சீவி சினிமாத்துறையில் வேலை வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல் இல்லை என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய அவர், “சினிமா ஒரு மிகச்சிறந்தத் துறை. இதில் யாருக்காவது எதிர்மறையான அல்லது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், அதற்கு அவர்களின் தனிப்பட்ட முடிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்கள் தொழிலில் தீவிரமாக இருந்தால், யாரும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதில்லை. சினிமாவில் வேலை வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல் இல்லை. இதுப்போன்ற கலாசாரம் இங்கு இல்லை. யாருக்காவது ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டால் அது அவர்களுடைய சொந்த தவறுதான். இந்தத் துறை ஒரு கண்ணாடி போன்றது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதையே அந்தக் கண்ணாடியில் காண்பீர்கள்” என்று பேசியிருக்கிறார்.

சிரஞ்சீவியின் இந்த பேச்சுக்கு எதிராகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.