சினிமா செய்திகள்

'இவானா என்ற நடிகை இருந்தார்... நல்ல படங்களில் நடித்தார்' - நடிகையின் வித்தியாசமான ஆசை

நிறைய படங்களில் நடிப்பதைவிட, சிறப்பான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என நடிகை இவானா தெரிவித்துள்ளார்.

சென்னை,

'லவ் டுடே' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை இவானா, அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிப்பதைவிட நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

'லவ் டுடே' கொடுத்த அடையாளம்

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை இவானா. கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'மாஸ்டர்ஸ்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து, 2018-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் இவானாவும் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது நடிகர் ஜீவாவுடன் இணைந்து 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

காதல், ரொமான்ஸ் கலந்த காமெடி படம்

இப்படம் குறித்து பேசிய இவானா, ''ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படம் காதல், ரொமான்ஸ் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பைப் போலவே படமும் ஜாலியாக இருக்கும். காதலிப்பதில் தொடங்கி திருமணம் வரை உள்ள காலகட்டத்தில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை நகைச்சுவையாகச் சொல்லும் படமாக இது இருக்கும்'' என்றார்.

நல்ல கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை

தனது சினிமா பயணம் குறித்துப் பேசிய அவர், ''ஒவ்வொரு படத்திற்கும் இடையில் அதிக கால இடைவெளி எடுத்துக்கொள்வது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். நான் மிகவும் கவனமாகப் படங்களைத் தேர்வு செய்கிறேன். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த நான், ஒரு நடிகையாக வருவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், சினிமாவில் நடிகையானேன். தமிழில் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அமைந்தது. 'லவ் டுடே' திரைப்படம் எனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.

நிறைய படங்களில் நடிப்பதைவிட, சிறப்பான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒரு கதையைக் கேட்கும்போது அது எனக்குப் பொருத்தமாக இருக்கிறதா, அந்தக் கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதைப் பார்க்கிறேன். அதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன். இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவில் இருப்பேனா என்று தெரியாது. ஆனால், 'இவானா என்ற ஒரு நடிகை இருந்தார், நல்ல படங்களில் நடித்தார்' என்று மக்கள் நினைவில் வைத்திருந்தால் அதுவே போதும்'' என்றார்.

SCROLL FOR NEXT