சினிமா செய்திகள்

"என் கனவை சிதைத்துவிட்டார்கள்" - 'எல்ஐகே' குறித்து விக்னேஷ் சிவன் பதிவு!

தனது சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார்.

100 கோடி வசூல் சாதனையை தொடர முடியாத படம்

பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்கள் அனைத்தும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்த நிலையில், ‘எல்.ஐ.கே’ அந்த சாதனையை தொடரத் தவறியது. இதனால், அவரது நடிப்பில் ரூ.100 கோடி வசூலை எட்டாத முதல் படமாக ‘எல்.ஐ.கே’ அமைந்தது.

சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். மேலும், படத்தின் முடிவு வருத்தம் அளித்தாலும், அது தனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக அமைந்துள்ளதாக கூறியிருந்தார். “இந்தப் படம் வெளியானதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர் போன்றது. இந்த அனுபவத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பேன்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

‘என் கனவை சிதைத்துவிட்டார்கள்’

இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் கனவை சிதைத்துவிட்டார்கள். இணையதளங்களில் பரவிய அதீத எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக லட்சியத்துடன் வரும் இயக்குநர்களின் கனவுகள் பாதிக்கப்படுகின்றன. அவை பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவிடாமல் தடுத்து விடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எல்.ஐ.கே படத்தை உருவாக்குவதும், வெளியிடுவதும் மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. பல சவால்களை கடந்து படம் வெளியாகிய நிலையில், அது இவ்வாறு முடிவடைந்ததை பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ஆரம்பத்தில் வரவேற்பு பெறாமல் பின்னாளில் சிறந்த படங்களாக கொண்டாடப்பட்ட பல திரைப்படங்கள் சினிமா வரலாற்றில் இருப்பதை நினைக்கும் போது தனக்கு ஆறுதல் கிடைப்பதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.