தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சூர்யாவுடன் திரிஷா இடம்பெற்ற ‘கருப்பு’ படத்தின்புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று சூர்யாவின் ‘கருப்பு’ பட டிரெய்லர் வெளியானது. சூர்யாவுடன் திரிஷா இடம்பெற்ற ‘கருப்பு’ படத்தின் ‘வெரப்பா’ பாடல் இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவித்திருந்தார். ‘கருப்பு’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘வீரபத்ருடு’ பட டிரெய்லர் நேற்று வெளியானது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பு ‘வீரபத்ருடு’ பட பிரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் கார்த்தி “இந்தப் படத்தில் சூர்யா அண்ணன் கத்தி, சுருட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தான் முதலில் பார்த்தேன். அதுவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு மாஸ் மசாலா படம், பொழுதுபோக்கு படம், குடும்ப படம் என்று கூட சொல்லலாம். ஆனாலும் இது மிகவும் நகைச்சுவையும் அடங்கிய படமாக இருக்கும். விஷ்ணுவின் ஒளிப்பதிவு, சாயின் இசை என படம் எனர்ஜியாக இருக்கிறது. காட் மோட் பாட்டே அதிர்ந்தது.
பீஸ்ட் மோட் தெரியும் காட் மோட் என்பது புதிய பதம். அதன் பிறகு வந்த பாடல்களும் அருமையாக இருந்தது. அண்ணன் நடித்த சில காட்சிகளை பார்த்தேன். இதெல்லாம் அவரால் மட்டுமே செய்ய முடியும், உண்மையில் காட் மோட்தான். அவரை பற்றி சிந்தித்தால் பாகுபலி நினைவுக்கு வருகிறது. பிரபாஸ் அந்த சிவலிங்கத்தை எடுத்து செல்வார் அல்லவா. அப்படி எவ்வளவு சுமை கொடுத்தாலும் அண்ணனால் தாங்க முடியும். சினிமாவை கொண்டாடும் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய படம் இது” என்றார்.