சினிமா செய்திகள்

'இந்தப் படம் என் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது' - காஜல் அகர்வால் ஓபன் டாக்

டி.கே.சேட்டன் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான 'தி இந்தியா ஸ்டோரி' விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகிறது.

சமூகப் பிரச்சினையை பேசும் 'தி இந்தியா ஸ்டோரி'

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு, உணவு கலப்படம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு குடும்பத்தின் கதையை மட்டும் சொல்லாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க கடுமையான சட்டங்களும், கட்டுப்பாடுகளும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளது.

'இந்தப் படம் என்னை மாற்றிவிட்டது'

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை காஜல் அகர்வால், 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம் தனது வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்திற்காக இயக்குநர் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தார். அதுதொடர்பான தகவல்களை எங்களுக்கும் படிக்கக் கொடுத்தார். உணவு கலப்படம், பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் குறித்து படித்தது என்னை முழுவதுமாக மாற்றிவிட்டது.

இப்போது என் குடும்பத்திற்காக வாங்கும் உணவுப் பொருட்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்கிறேன். 'இயற்கை' என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் உண்மையிலேயே இயற்கையானவையா? விலை அதிகமாக இருப்பதால் மட்டுமே அவை தரமானவை என்று நம்புகிறோமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துள்ளன.

இந்தப் பிரச்சினை குறித்து சமூகத்தில் திறந்த உரையாடல் தொடங்க வேண்டும். அதே நேரத்தில், விவசாயிகளுக்கு அரசு தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். காஜல் அகர்வாலின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.