வாஷிங்டன்,
இங்கிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரம். ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு '007' என்ற குறியீடும் வழங்கப்பட்டது.
இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு 'டாக்டர் நோ' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.
அன்று முதல் கடைசியாக கடந்த 2021-ல் வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படம் வரை, மொத்தம் 25 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசை திரைப்படங்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களும், பெரும் புகழ் அடைந்து விடுகின்றனர். சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார். பியர்ஸ் பிராஸ்னன் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் ஆக வலம் வந்தார்.
கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து விலகினார். எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, நடிகர் ராபர்ட் பேட்டின்சன், 7-வது ஜேம்ஸ் பாண்ட் நடிகராக அவதாரம் எடுக்க உள்ளார். இவர் ‘டிவைலைட்’, ‘தி பேட்மேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவராவார்.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை ‘அரைவல்’, ‘டியூன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய டெனிஸ் வில்லெனிவ் இயக்குகிறார். இது தொடர்பாக நடிகர் ராபர்ட் பேட்டின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவம். எனது கனவு நனவானது போல் உள்ளது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.