சென்னை,
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ரசிகர்களால் 'மார்க்கண்டேயன்' என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான சிவக்குமார், 84 வயதிலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கான காரணங்களை பகிர்ந்துள்ளார். தனது வாழ்க்கை முறையில் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் பழக்கங்களே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார், 20 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் இருந்து விலகி, தற்போது சொற்பொழிவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் பேசிய அவர், 1965-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து யோகா செய்து வருவதாகவும், 65 வயது வரை தலைகீழாக நிற்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருந்ததாகவும் கூறினார்.
மேலும், "84 வயதிலும் நான் தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். கால்கள்தான் நமது இரண்டாவது இதயம். அனைவரும் தினமும் வாக்கிங் சென்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்" என்று அறிவுறுத்தினார்.
தனது அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பேசிய சிவக்குமார், "ஒவ்வொரு நாளும் காலை 40 முதல் 45 நிமிடங்கள் வரை வீட்டு மொட்டை மாடியில் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். காலை வெயிலில் நடப்பதால் உடலுக்கு இயற்கையாக வைட்டமின் D கிடைக்கிறது. மேலும் வியர்வை வெளியேறுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது" என்றார்.
அதோடு, தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடைப்பயிற்சி மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் முக்கிய காரணமாகும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.