சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி செருப்பு அணியாததற்கு இதுதான் காரணம்... மனைவி பாத்திமா உருக்கம்

அப்பா குட்டி பட விழாவில் மேடையில் பேசிய பாத்திமா, விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சென்னை,

விஜய் ஆண்டனி பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளி இடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் காலில் செருப்பு அணியாமல் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர், பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளி இடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் காலில் செருப்பு அணியாமல் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கான உருக்கமான பின்னணியை அவரது மனைவி பாத்திமா தெரிவித்துள்ளார்.

விரைவில் வெளியாகும் 'அப்பா குட்டி'

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'அப்பா குட்டி'. இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, லிதன்யா, பக்ஸ், அருவி மதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மு.மாறன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், படத்தின் தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமாவும் கலந்து கொண்டார்.

மகளின் நினைவால் எடுத்த முடிவு

இந்த விழாவில் மேடையில் பேசிய பாத்திமா, விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, "விஜய் ஆண்டனி ஏன் எப்போதும் செருப்பு அணியாமல் செல்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஒரு வலி நிறைந்த காரணம் இருக்கிறது. எங்களது மூத்த மகள் மீரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கல்லூரிக்குச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட காலணிகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தோம். ஆனால், அவற்றை அணியாமலேயே அவர் சென்றுவிட்டார். அந்தக் காலணிகள் அனைத்தும் இன்றும் வீட்டில்தான் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் விஜய் ஆண்டனிக்கு மகளின் நினைவு வந்து மனவேதனை ஏற்படும். இதனால் இனி செருப்பே அணிய மாட்டேன் என்று அவர் முடிவெடுத்தார். அதேபோல், வீட்டில் விலை உயர்ந்த பல கைக்கடிகாரங்கள் இருந்தாலும், எங்களது மகள் கடைசியாக அணிந்திருந்த கைக்கடிகாரத்தை மட்டுமே விஜய் ஆண்டனி இன்றும் அணிந்து வருகிறார்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

பாத்திமாவின் இந்தப் பேச்சு விழாவில் இருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. மகளின் நினைவுகளைப் போற்றும் வகையில் விஜய் ஆண்டனி மேற்கொண்டு வரும் இந்தச் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

SCROLL FOR NEXT