பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார், 58 வயதிலும் சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பையும் தக்க வைத்திருப்பதற்காக ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறார். சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் தொடர்ந்து அசத்தி வரும் அவர், தனது ஆரோக்கிய வாழ்க்கை முறையால் பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது ஆரோக்கியத்தின் ரகசியம் குறித்து அக்ஷய் குமார் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 24 மணி நேரத்தை 8 மணி நேர வேலை, 8 மணி நேர குடும்பத்துடன் செலவிடுதல் அல்லது ஓய்வு, 8 மணி நேர தூக்கம் என சமநிலையாகப் பிரித்து வாழும் '8-8-8' வாழ்க்கை முறையையே தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தினசரி வாழ்க்கையில் யோகா, மார்ஷியல் ஆர்ட்ஸ், நீச்சல், ஓட்டப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருவதாகவும், வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற எளிய பழக்கங்களும் தனது உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய காரணம் என அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.