சினிமா செய்திகள்

‘இதனால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்...’ - விஷால் பேட்டி

அரசியல்வாதிகள் தங்கள் வேலையை செய்தால், நடிகர்கள் நடிகர்களாகவே இருப்போம் என விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஷால் அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது விஷால் கூறியதாவது;-

“சைக்கிளில் வந்து வாக்கு செலுத்துவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு சைக்கிளில் வருவது பிடிக்கும். ஏற்கனவே பலமுறை சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியிருக்கிறேன். எல்லா தொகுதிகளிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் நமது வாக்கை செலுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள் தங்கள் வேலையை செய்தார்கள் என்றால், நடிகர்கள் நடிகர்களாகவே இருப்போம். ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நிறைய இடங்களில் குப்பை கொட்டிக் கிடக்கிறது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நாங்களே இறங்கி வேலை செய்துள்ளோம். ஆட்சிக்கு வருபவர்கள் அடுத்த 5 வருடங்களில் எல்லா தொகுதிகளிலும் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்வார்கள் என நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.