சென்னை,
'பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை' போன்ற படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் 'பைசன்' என்ற படம் வெளியானது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து, இயக்குனர் மாரிசெல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'D56' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ், 'D56' படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, “அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு பேண்டஸி, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.