சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் சித்திரவதையா? இந்தி நடிகை தற்கொலை வழக்கில் கிளம்பிய சர்ச்சை

நடிகை சஞ்சிதா உகலேவின் தந்தை பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தின் நல்லசோப்ரா பகுதியில் வசித்து வந்தவர் நடிகை சஞ்சிதா உகலே (22). 'கும்கும் பாக்யா', 'வாக்லே கி துனியா' உள்ளிட்ட பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றிருந்தார்.

கடந்த 14-ஆம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த சஞ்சிதா, மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

தற்கொலை குறிப்பு எதுவும் சிக்கவில்லை

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வீட்டில் சந்தேகத்திற்கிடமான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சீரியல் குழுவினர் மீது தந்தை குற்றச்சாட்டு

இந்த நிலையில், சஞ்சிதா உகலேவின் தந்தை பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவரது மகள் தற்கொலை செய்து கொள்ள சீரியல் படப்பிடிப்பு குழுவினர் கொடுத்த கடுமையான மன அழுத்தமே காரணம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், தினமும் 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்பட்டதாகவும், அவரது நடிப்புத் திறனை தொடர்ந்து குறைத்து பேசி மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே தனது மகள் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.