சென்னை,
கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
‘தி கேர்ள்பிரண்ட்’, ‘சென்னை லவ் ஸ்டோரி’, ‘கப்பிள் ஃபிரெண்ட்லி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தீரஜ் மொகிலினேனி, தனது தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷ வர்தன், வாசுகி ஆனந்த், கே.வி., உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரமணா பார்கவ், ஹர்ஷினி கோடூரி, மகேஷ் சிந்தலா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டிரெய்லரில், கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்கும், அவன் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என எதிர்பார்க்கும் தந்தைக்கும் இடையிலான முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன. தந்தையாக ஹர்ஷ வர்தன் நடித்துள்ளார். சிறுவனின் கனவுகளுக்கு ஆதரவாக இருக்கும் தாயாக வாசுகி ஆனந்த் நடித்துள்ளார்.
இதையடுத்து, கதை கிராமத்துக்குச் செல்கிறது. அங்கு மாஸ்டர் ரோஹன் நடித்துள்ள கே.வி. என்ற சிறுவன், படிப்பில் ஆர்வமின்றி தனது விருப்பப்படி வாழ்க்கையை ரசிக்கிறான். அவனது பள்ளிப் பருவக் குறும்புகள், நண்பர்களுடனான விளையாட்டுகள் மற்றும் சுமதி என்ற சிறுமி மீதான ஈர்ப்பு உள்ளிட்டவை டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. சுமதி கதாபாத்திரத்தில் பேபி குஷி நடித்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுடன் அமைந்துள்ள இப்படம், குழந்தைகளின் கனவுகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கருத்துகளையும் பேசுகிறது. இயற்கை எழில் நிறைந்த காட்சிகளும், சின்ஜித் யெர்ரமில்லியின் இசையும் டிரெய்லருக்கு வலுசேர்க்கின்றன.