ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் திரிஷா நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான திரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம், மர்மம், திகில் மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது.
இந்தத் திரைப்படத்தை பிரபல இந்தி திரைப்படமான ‘டாக்டர் பிரியதர்ஷினி’ தொடர்களின் பின்னணியில் உள்ள பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, தமிழ் திரையுலகில் தனது முதல் தயாரிப்பு அடியை எடுத்து வைக்கிறது. லோகோமோட்டிவ் குளோபல் மற்றும் பியூஷன் பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பிரம்மாண்ட படைப்பை வழங்குகின்றனர். குமார் மங்கத் பாடக், அபிஷேக் பாடக், விகாஸ் சர்மா, அமித் டால்மியா மற்றும் சுந்தர் ஆரோன் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
நசீருதீன் ஷா நடித்த ‘பாரா ஆனா’, அக்ஷய் குமாரின் ‘ஏர்லிஃப்ட்’ மற்றும் சாய்ஃப் அலி கான் நடித்த ‘செஃப்’ போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்ற பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், இவர் சைக்கலாஜிக்கல் ஹாரர் பிரிவில் இயக்கும் முதல் படமும் இதுவேயாகும்.
இத்திரைப்படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்று, முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது. திரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி என நடிப்புத் திறமை வாய்ந்த மூன்று முன்னணி நடிகைகள் முதன்மை வேடங்களில் ஒன்றிணைவது இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உயர்த்தியுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பேசுகையில், “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொறுத்தமாக குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் இப்படம் எனக்கு முதல் அனுபவமாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். அதோடு த்ரிஷா, ராதிகா, அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது” என்றார்.
இப்படத்தின் கதைக்களம், கூடுதல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பிற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.