சினிமா செய்திகள்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தவெக அரசு செயல்படுகிறது - குஷ்பு

விஜய் முதல்- அமைச்சரான உடனேயே அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு இன்று முதல்- அமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தினார். மேலும், குஷ்பு சின்னத்திரை கலைஞர்கள் சார்பான சில கோரிக்கைகளையும் முதல்- அமைச்சரிடம் முன்வைத்துள்ளார். அவருடன் நடிகை குட்டி பத்மினி மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களும் உடன் இருந்தனர்.

முதல்- அமைச்சர் விஜய் உடனான சந்திப்புக்கு பின் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “முதல்- அமைச்சர் விஜய்யை எனக்கு தம்பி என சொல்வதில் எனக்கு பெருமை. தெளிவான அரசாங்கத்தை இன்று பார்க்க முடிகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தவெக அரசு செயல்படுகிறது. கோயம்புத்தூர் சிறுமிக்கு நடந்த சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். இந்த சமூகத்தில் இதுபோன்ற மிருகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. விஜய் முதல்- அமைச்சரான உடனேயே அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். அவர்களால் செய்ய முடியாத மாற்றத்தை பத்து நாட்களில் எப்படி செய்ய முடியும்? இப்போதுதான் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கு தேவையான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். மக்கள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்தான் அவருக்கு வாக்களித்துள்ளனர். நேரம் கொடுத்தால் நிச்சயமாக மாற்றம் வரும்” என்று குஷ்பு தெரிவித்தார்.