'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்', 'ஜோ', 'ஸ்வீட் ஹார்ட்', 'ஆண்பாவம் பொல்லாதது' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது அவர், 'ராம் இன் லீலா' என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் 'ராம் இன் லீலா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள 'ராம் இன் லீலா' படத்தின் முதல் பாடல் வருகிற 25-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.