வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ‘கப்பல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தில் நடித்தனர். இப்படம் மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம்.
இந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ‘மணிகண்டா’. இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ‘மாளிகைபுரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார்.
தாந்த்ரா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் வெங்கட் பிரபு பணியாற்றியுள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
‘மணிகண்டா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. ஐயப்பன் வேடத்தில் வைபவ் நின்றிருக்கும் போஸ்டரில் ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் பான் இந்தியா முறையில் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.