சினிமா செய்திகள்

தாயாய் தமக்கையாய்.. மனைவியாய் மகளாய்.. - மகளிர் தின வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

பெண் இன்னும் எட்டவேண்டிய இடம் தூரத்திலும் உயரத்திலும் இருக்கிறது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் கவிஞர் வைரமுத்து, வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தாயாய் தமக்கையாய்

மனைவியாய் மகளாய்

தோழியாய் செவிலியாய்

ஆசானாய் அரசியாய்

சமூக இயங்கியலில்

பங்காற்றும் பெண்

இன்னும் எட்டவேண்டிய இடம்

தூரத்திலும் உயரத்திலும்

இருக்கிறது

மதம் மரபுகள் என்ற

இரண்டின் விலங்குகளைக்

கல்வி தொழில்நுட்பம்

என்ற சம்மட்டிகள்

உடைத்தெடுக்கும் காலத்தில்தான்

பெண்களின்

உலகவிடுதலை உருவாகும்;

நாளாகும்

குழந்தை மணம்

உடன்கட்டை போலவே

பெண்ணுக்குள் வினைப்படும்

சமையல்காரியும் ஒழிந்துபோவாள்

ஆண்களால் வடிவமைக்கப்பட்ட

பெண்களுக்கான நிகழ்ச்சிநிரல் முடிந்துவிடும்

பெண்ணுக்குள் புகுத்தப்பட்ட

அடிமை - தெய்வம்

இரண்டும் வெளியேறிவிடும்

காலப்போக்கில்

திருமணம் ஒழியும்;

குழந்தை பெறுதல்

சுயவிருப்பமாகும்;

பெண் தற்சார்பு பெறுவாள்

தனி உரிமையாகிய

வீடு என்பது ஒழிந்து

இருப்பிடம் என்னும்

கூடு உருவாகும்

வாழ்வு மரணம் இரண்டிலும்

தனியார் தலையீடு இருக்காது

பெண்ணின்

உடல் மனம் தொழில்

என்ற மூன்றும்

எதையும் யாரையும்

சாராதியங்கும்

விரும்பியோ விரும்பாமலோ

இவை நிகழும்நாளில்

பெண்விடுதலை பூரணமாகும்

எங்கள் வாழ்வின்

காரணமான பெண்ணினமே

அந்தப் பூரணம்பெற

வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT