சென்னை,
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டேன். ஆசிரியர் வேந்தர் கி.வீரமணி தலைமையேற்றார். ஒரு பகுத்தறிவாளர் படைத்த பல்கலைக்கழகம் பாட்டாளி மக்களின் பிள்ளைகளைப் பட்டதாரிகள் ஆக்கிக்கொண்டு இருக்கிறது. அதன் ஒவ்வோர் அசைவுக்கும் அறிவியலே ஆதாரமாய் விளங்குகிறது.
பல்கலைக் கழகத் துணைத்தலைவர் வீ.அன்புராஜ் வளாகத்தில் ஒரு வனாந்தரமே வளர்த்திருக்கிறார். அது ஓர் ஆக்சிஜன் மையமாகத் திகழ்கிறது. ‘புரட்சிக் கவிஞரின் புது உலகம்’ என்று வேந்தர் வீரமணி கொடுத்த தலைப்பில் உரையாற்றினேன். ” பெரியார் கவிஞரானால் எப்படி இருக்கும் அது பாரதிதாசன் போல் இருக்கும் என்பதற்கு மேலான கவிதைகளை மேற்கோள் காட்டினேன்.
எனக்கு விட்டுப்போன பேச்சையெல்லாம் வேந்தர் வீரமணி பேசினார். புரட்சிக் கவிஞரைப் போற்றினார். என் ஞானபீட விருதுக்குப் புகழ் கூட்டினார். அவர் பேச்சு நடையும் பீடு நடையும் அவர் வயது 93 அல்ல 53 என்றே காட்டுகின்றன. பகுத்தறிவின் உயரம் சுயமரியாதையின் சிகரம் எதிர்கால உலகம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.