சென்னை,
1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பாராதிராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல், வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அங்குள்ள தோட்டத்தில், அரசுமரியாதையுடன் அவரது உடல்நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் பாரதிராஜாவுன் நண்பரும் பாடலாசிரியருமான வைரமுத்து, பாரதிராஜாவுக்காக பாடிய பாடலையும், அவருடைய உரையாடலையும் வீடியோவாக வெளியிட்டு வேதனையை பகிர்ந்துள்ளார்.