சினிமா செய்திகள்

பழம்பெரும் இந்தி நடிகர் பாரத் கபூர் காலமானார்

இந்தி திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பாரத் கபூர் முத்திரை பதித்தவர்.

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் பாரத் கபூர் (வயது80), கடந்த 3 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப் பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அவர் தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். இந்தி திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பாரத் கபூர் முத்திரை பதித்தவர். குறிப்பாக, 'நூரி', 'ராம் பலராம்', 'இன்கார்', 'பார்சாத்', 'ஆக்ரி ராஸ்தா' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. மேலும் 'ஹிந்துஸ்தான் கி கசம்', 'பலிதான்' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள்ளார்.

பாரத் கபூரின் இறுதி சடங்கு மும்பை சயான் ஆஸ்பத்திரி அருகே உள்ள மயானத்தில் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மறைந்த பாரத் கபூருக்கு லோபா என்ற மனைவியும், ராகுல் மற்றும் சாகர் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.