சினிமா செய்திகள்

“ஜன நாயகன்” லீக் குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இப்படம் வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின் 'ஜன நாயகன்' படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி, குஷ்பு, ரஜினி,கமல் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியான சம்பவம் எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.எனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில், இது போன்றதொரு நிகழ்வு நடந்தபோது ஏற்பட்ட வேதனையையும், இழப்பு உணர்வையும் நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். அப்போது ஒருவர் தன்னை ஒரு தாக்குதலுக்கு இலக்கானவராகவே உணர்வார்; நம்பிக்கையை இழந்தது போலத் தோன்றும். இது என்னைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல; இதில் சக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என தங்கள் கனவுகள் அனைத்தையும் பந்தயமாக வைத்துப் பணியாற்றும் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இது வெறும் சினிமா பிரச்சனை அல்ல.. ஒரு இயக்குநரின் கனவு, தயாரிப்பாளரின் முதலீடு மற்றும் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பை அழிக்கும் செயல்.குற்றவாளிகளை உடனடியாக கண்டறியத் தவறினால் அது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி. தற்போதைய இந்தப் பிரச்சனை கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.இதற்குப் பின்னால் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். சற்றும் யோசிக்காமல் பிறருக்குத் தீங்கு விளைவிக்கச் சிலர் எந்த எல்லை வரையிலும் செல்வார்கள் என்பதையும் இச்சம்பவம் நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது.இப்படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.