சினிமா செய்திகள்

'ஜெயிலர் 2' படத்துடன் மோதும் விஜய் தேவரகொண்டாவின் `ரணபாலி' படம்

இந்த வெளியீட்டு தேதி தென்னிந்திய திரையுலகில் முக்கியமான திரைப்பட மோதலாக பார்க்கப்படுகிறது.

சென்னை,

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் திரைக்கு வருவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணபாலி’. இவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரமாண்டமாக உருவாகும் ‘ரணபாலி’

ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘மம்மி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தனது மக்களை காப்பாற்ற போராடும் புரட்சிகர வீரனை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. ‘ரணபாலி’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய நாளில் ‘ஜெயிலர் 2’

இதனிடையே, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் சுராஜ் வெஞ்சரமூடு, வித்யாபாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒருநாள் இடைவெளியில் ரிலீஸ்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15-ம் தேதியும், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ அக்டோபர் 16-ம் தேதியும் வெளியாக உள்ளன. இதனால் இரு படங்களுக்கும் இடையே நேரடி மோதல் இல்லாவிட்டாலும், ஒருநாள் இடைவெளியில் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இரு படங்களுமே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்பதுடன், பான்-இந்தியா அளவில் வெளியாக இருப்பதால், அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களும் திரையுலகில் முக்கியமான வெளியீட்டு நாட்களாக அமைய உள்ளன.

SCROLL FOR NEXT