சினிமா செய்திகள்

விஜய் புதிய பயணத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார் - விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆப் கோல்டு’ திரைப்படத்தை சித்தார்த் இயக்குகிறார்.

விஜய் ஒரு புதிய பயணத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று விக்ரம்பிரபு தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை ஆகிய வெற்றிப் படங்களில் கவனம் பெற்றார். கடைசியாக வெளியான ‘சிறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சிறை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபுவின் 26-வது படம்

விக்ரம் பிரபு தனது 26ஆவது படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'சத்ரியன்' (2017) திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு யுவன் சங்கர் ராஜா இருவரும் இணையும் இரண்டாவது கூட்டணி இது என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படம்

தங்க மார்க்கெட் பின்னணியை மையமாகக் கொண்டு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. இதில் விக்ரம் பிரபுவுடன் சிவத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் டைட்டில் வெளியீடு

விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார். கோவையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் ‘சிட்டி ஆப் கோல்டு’ பட குழுவினரான விக்ரம் பிரபு, சிவாத்மிகா ராஜசேகர், இயக்குனர் சித்தார்த் ஆகியோர் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் விக்ரம் பிரபு, கோவையை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சிட்டி ஆப் கோல்டு’ திரைப்படம் கடந்த 52 நாட்களாக கோவையில் படமாக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் இரண்டு நாட்கள் படபிடிப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கோவையில் ஏற்கனவே பல்வேறு படப்பிடிப்புகளில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்திருப்பது நல்ல ஒரு அனுபவமாக இருப்பதாகவும் கூறினார்.

ஒவ்வொரு படத்திலும் நல்ல கதையம்சம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தான் நடித்த வருவதாகவும் இந்த படத்தின் குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இப்படம் முழுக்க கமர்சியல் படமாகவும் பொழுதுபோக்கு படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விஜய்யின் ஆட்சி

அவரிடம் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்த செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, அவர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும் அவர் தற்போது ஒரு புதிய பயணத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடத்தி் கொண்டிருப்பதாகவும் அதே வேளையில் அவர் ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இயக்குனர் சித்தார்த், கோவை தங்க நகை தொழிலுக்கு மிக முக்கியமான நகரம் என்பதால் தங்கத்தையும் தங்க நகை உற்பத்தியையும் கோவையையும் சம்பந்தப்படுத்தி இந்த படத்தை இயக்கி வருவதாகவும் அதனுடன் சேர்த்து ஒரு கமர்சியலான கதையை உருவாக்கி இருப்பதாகவும் கூறினார்.

SCROLL FOR NEXT