தமிழக முதல்-அமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசி படம் 'ஜனநாயகன்'. தேர்தலுக்கு முன்பே இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.
வெங்கட் நாராயணா கூறுகையில், “ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். தணிக்கை வாரியத்தின் அனுமதி கிடைத்ததும் உடனடியாக படம் திரைக்கு வரும். விஜய் சாரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் மிகவும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் கொண்டவர். அவர் என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவார். சொல்வதையே செயலிலும் காட்டுபவர்,” என்று நாராயணா கூறினார்.