சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடித்துள்ள 'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பு நிறைவு

'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்துள்ள 'பாக்கெட் நாவல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தனித்துவமான இயக்குநர்

தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

வெற்றிக் கூட்டணி

இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவு

தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT