சினிமா செய்திகள்

கிராமத்து கதையில், வேட்டி சட்டையில் விஜய் சார்- வைரலாகும் ரத்னகுமாரின் பேச்சு

இயக்குனரின் இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இவர் தற்போது, 'ஸ்டோன் பெஞ்ச்', 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் '29' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படம் வருகிற மே 8ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யை மையமாகக் கொண்டு ஒரு கிராமத்து கதையை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “விஜய் சாரை வேட்டி சட்டையில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்றது போல ஒரு கிராமத்து கதையை தயார் செய்து வருகிறேன் என சொல்லி இருந்தேன் அதை பார்த்துவிட்டு விஜய் சார் மெசேஜ் செய்தார். அந்த கிராமத்து கதையை கேட்க விரும்புகிறேன் எனக் கூறினார். நானும் சென்று கதையை கூறினேன், அவருக்கு பிடித்திருந்தது. அந்த சமயத்தில் தான் வாரிசு படத்துக்கான பேச்சு வார்த்தையும் நடந்து வந்தது வாரிசு படம் துவங்க உள்ளதாக அறிவித்ததால், சார் அதற்கு போய்விட்டார். என்னுடைய பயணமும் வேறு பக்கம் போய்விட்டது.,” என்றும் கூறினார்.

இயக்குனரின் இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி, “விஜய் கிராமத்து கதையில் நடித்தால் எப்படி இருக்கும்?” என்ற எதிர்பார்ப்பை மீண்டும் கிளப்பியுள்ளது.