சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வாக்கு சதவீதத்தில் பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது.
உமாபதி ராமையா இயக்கத்தில் நட்ராஜ் நடித்துள்ள ‘டிஎன் 2026’ திரைப்படம் கடந்த 10ந் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல், நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான இந்த படம் வரவேற்பை பெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் நடக்கிற அரசியல் சிக்கல்களை, அவலங்களை நேர்த்தியாக எல்லோரும் ரசிக்கும்படி யார் மனதையும் புண்படாதபடி, திணிந்து தாக்க வேண்டும் என்று நோக்கம் இல்லாது அதன் காலப்போக்கில் கதை ஓட்டத்திலேயே மிக நகைச்சுவையோடு வருடி, இந்த அவலத்தை மக்களுக்கு சொல்கிற விதத்தில் மிகச்சிறப்பாக திரைக்கதையாக இயக்குனர் உமாபாதி ராமையா கொடுத்துள்ளார். இப்படத்தின் டீசரில் "சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!" போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கிறது. விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்று இருப்பது போல தெரிகிறது என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக பதிவிட்டு வந்தார்கள். நட்டி நட்ராஜ்ஜின் தோற்றம் விஜய் போன்றும், தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், டீசர் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த விவாதம் அதிகரித்தது. இப்படம் கலவையான விமர்சனங்களால் வணிக ரீதியாக பின்னடவையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், நட்டி நட்ராஜ் தனது எக்ஸ் தளத்தில், “நான் முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கிறேன். விஜய்தான் அடுத்த முதல்வர். நம்பிக்கையாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார். இதற்காக, பலரும் நட்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.