சினிமா செய்திகள்

“விஜய்யின் ரசிகர் பட்டாளம் என்னை ஆச்சரியப்படுத்தியது” - பிரியங்கா சோப்ரா

நடிகர் விஜய் குறித்து சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

சென்னை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகம் ஆனார். சமீபத்திய பாட்காஸ்டில் பேசிய பிரியங்கா சோப்ரா, தனது முதல் படத்தின் ஹீரோவான நடிகர் விஜய் குறித்து சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அப்போது விஜய் ரசிகர்கள் பற்றியும் பிரியங்கா சோப்ரா பேசினார். பிரியங்கா சோப்ரா கூறியதாவது: -

2002-ம் ஆண்டு தமிழன் படத்தின் ஷூட்டிங்கில் நான் பார்த்த காட்சிகளால் தான் எனக்கு நட்சத்திர அந்தஸ்து பற்றிய புரிதல் ஏற்பட்டது. விஜய்யின் மகத்தான புகழ் அவர் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில் நான் விஜய்யுடன் இணைந்து நடித்தேன். ஷுட்டிங் செட்களுக்கு நான் செல்லும்போது, அவர் நடனமாடுவதை, நடிப்பதை பார்க்க மட்டுமே அவ்வளவு கூட்டம் வரும். அவரது ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இந்தியாவில் மக்கள் தங்கள் திரைப்படங்களை நேசிக்கிறார்கள். ரசிகர்கள் என்ன மாதிரியான அன்பை கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் நடிப்பும், புகழும் சமம் என நினைத்திருந்தேன். இளம் வயது என்பதால் சரியான புரிதல் இல்லை. நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பதால் தான் நாம் இந்த துறையில் இருக்கிறோம் என நினைத்து விட்டேன். ஆனால் ஒரு வேலையின் வெளிப்பாடாக தான் அந்த புகழ் நமக்கு கிடைக்கும் என்பது பிறகுதான் புரிந்தது” இவ்வாறு அவர் கூறினார்.