சென்னை,
‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விஷால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், படத்தில் அவர் போட்டிருக்கும் 3 கெட்-அப்களிலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கூறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்ட அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும், விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ‘மகுடம்’ படத்தின் ‘ரைஸ் ஆப் லிங்கா’ எனும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விஷால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், படத்தில் அவர் போட்டிருக்கும் 3 கெட்-அப்களிலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கூறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.