விஷால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ திரைப்படத்தில் ஒரு வலிமையான, அழகான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாக நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்ட அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘மகுடம்’ படத்தின் ‘ரைஸ் ஆப் லிங்கா’ பாடல் வெளியாகி வைரலானது. ‘நச்சிந்தி மச்சானே’ பாடலை ஏகாதசி வரிகளில் மங்லி, வேல்முருகன் இணைந்து பாடியுள்ளனர்.
சமீபத்தில் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விஷால் தனது டுவிட்டரில் பதிவிட்டார். மேலும், படத்தில் அவர் போட்டிருக்கும் 3 கெட்-அப்களிலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கூறிய வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், ‘மகுடம்’ படம் குறித்து நடிகை அஞ்சலி “விஷால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ திரைப்படத்தில் ஒரு வலிமையான, அழகான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். விஷால் எனக்கு கடந்த 15 ஆண்டுகாலப் பழக்கமானவர், அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நட்புப் பிணைப்பு உள்ளது. மிகச்சிறந்த படமாக உருவாகி வரும் இத்திரைப்படம், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் '99-வது' மைல்கல் திரைப்படமாகும். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாரை நாங்கள் பெரிதும் மிஸ் செய்கிறோம், இருப்பினும் அவரது ஆசிகள் எப்போதும் எங்களுடன் இருக்கும் என்று நம்புகிறோம்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.