சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இதயம் முரளி’. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை, எமோஷனல் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் நடித்த முக்கியக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பகிர்ந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், "'இதயம் முரளி' படத்தில் பகத் பாசில் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் எஸ்.ஜே. சூர்யாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பகத் பாசில் படத்தில் இணைந்தார். அவருக்கு டிரெய்லரைக் காட்டியதும் மிகவும் பிடித்துவிட்டது. அதன்பிறகு ஒரு அல்லது இரண்டு நாட்களிலேயே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்" என்றார்.
அப்போது பகத் பாசில் மற்றொரு பெரிய படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாகவும், குறிப்பாக இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படத்தின் பணிகளுக்கு இடையே கிடைத்த நேரத்தை பயன்படுத்தி, நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டன என்றும் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்தார்.
படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திற்காக முதலில் எஸ்.ஜே. சூர்யாவை தேர்வு செய்ய திட்டமிட்டு, பின்னர் பகத் பாசில் இணைந்தது குறித்த இயக்குநரின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.