சினிமா செய்திகள்

கேள்வி கேட்காமல் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு நாங்கள் ஆடுகள் அல்ல - நடிகர் பிரகாஷ்ராஜ்

தன்னை தலைவர் என்று நினைப்பவருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று பவன் கல்யாண் கட்சியை பிரகாஷ்ராஜ் சாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துவருகிறார். மேலும், இன்னும் சில நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தனது கருத்தை வலுவாக வைக்கக்கூடியவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில், ‘கேள்வி கேட்காமல் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு நாங்கள் ஆடுகள் அல்ல’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் பொதுச் செயலருமான நாகபாபு கொனிடேலா, ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாணை ஆதரித்து பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ‘ஒரு தலைவரின் வார்த்தையே இறுதியானது. அவரது பாதையில் சாத்தான்களையும் அரக்கர்களையும் யாரும் கண்டதில்லை, எது சரி எது தவறு என்பது அவருக்கு மட்டுமே தெரியும். உங்கள் சந்தேகங்களை மூடுங்கள், உங்கள் நாவை அடக்குங்கள், கேள்வியின்றி தலைவரை பின்பற்றுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பிரகாஷ் ராஜ், ‘நாங்கள் ஆடுகள் அல்ல... பிழைப்பதற்காக அடிமைகளாக இருப்பவர்கள் அல்ல. இதுபோன்ற மிரட்டல்களை விடுக்காதீர்கள். கேள்வி கேட்பது எங்கள் உரிமை. எந்தவொரு தலைவருக்கும்... தன்னை ஒரு தலைவர் என்று நினைப்பவருக்கும், பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. புரிகிறதா’ என தெரிவித்துள்ளார்.