சினிமா செய்திகள்

நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்

தங்களது திருமண வாழ்க்கை குறித்து ரம்யா கிருஷ்ணன் அளித்துள்ள விளக்கம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

சென்னை,

நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான கிருஷ்ண வம்சியும் விவாகரத்து செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், தங்களது திருமண வாழ்க்கை குறித்து ரம்யா கிருஷ்ணன் அளித்துள்ள விளக்கம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

நடிகை ரம்யா கிருஷ்ணன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் 260-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரம்யா கிருஷ்ணன். தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், சமீபத்தில் வெளியான 'ஜெயிலர் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.

இருவேறு நகரங்களில் வசிக்கும் தம்பதி

ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், அவரது கணவர் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்திலும் வசித்து வருவதால், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் விவாகரத்து செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரம்யா கிருஷ்ணன், வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். இதனால் சென்னை, ஹைதராபாத் என இரு நகரங்களுக்கும் அடிக்கடி சென்று வந்தேன். அப்போது நான் வெளியூர் சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் எனது மகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் நானும் எனது கணவரும் ஆலோசித்து ஒரு முடிவெடுத்தோம். அதன்படி, எங்கள் மகனை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு நான் சென்னையிலேயே தங்கிவிட்டேன். நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம். இது முழுக்க முழுக்க எங்களது பணி மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு. இருவரும் வெவ்வேறு நகரங்களில் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வசித்து வருகிறோம்" என்றார்.

கணவருடன் நல்ல நட்பு

மேலும், "நடைமுறை சாத்தியங்களுக்காக எடுத்த இந்த முடிவு தற்போது எங்கள் இருவருக்குமே வசதியாக இருக்கிறது. அருகில் இருந்து சண்டையிட்டுக்கொள்வதைவிட, இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் திருமணத்துக்கு முன்பு கிருஷ்ண வம்சி என்னிடம் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழலாமே என்று கூறினார். அப்போதே நான் அதற்கு சம்மதித்திருக்க வேண்டும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

ரம்யா கிருஷ்ணனின் இந்த விளக்கத்தின் மூலம், கணவருடன் விவாகரத்து செய்துகொண்டதாகப் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT