'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படும் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. என் இனிய தமிழ் மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்' என்ற அந்த தனித்துவ குரலுக்கு சொந்தக்காரர் மரணம் திரையுலகினர், பொதுமக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்குக்காக பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் உள்ள காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து, சொந்த ஊரான காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் மாலை 4 மணியளவில் பாரதிராஜாவில் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. காவல் துறையினர் பேண்ட் வாத்திய இசைக்கப்பட்டு, அணிவகுப்புடன் அவரது உடல், அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அப்போது 72 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து பாரதிராஜாவின் இழப்பை தாங்கமுடியாமல் தனது எக்ஸ் தளத்தில் புதையலை புதைத்துவிட்டோம்! என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பிறந்த மண்ணில்
அடக்கம் செய்யப்பட்டார்
பாரதிராஜா
83 ஆண்டுகளுக்கு முன்னே
தமிழர்கள் பெற்ற
ஒரு புதையலைக்
குழிதோண்டி மீண்டும்
புதைத்துவிட்டோம் பூமிக்குள்
மேற்குத்தொடர்ச்சி மலைகளே
கள்ளிக்காடே கரடே நதியே
பச்சைத் தாவரங்களே
பாடும் பறவைகளே
வைகை அணைமீது மோதும்
வருசநாட்டுக் காற்றே
உங்கள் மகனை
உங்கள் மடியில்
ஒப்படைத்துவிட்டோம்
உடைந்த சொற்களின்
கதறல்கள்,
வட்டார வழக்கில் புலம்பல்கள்,
கண்ணாடிப் பெட்டியைக்
கட்டிக் கொண்டு
கண்ணீர் விட்ட மாதரார்,
ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே
தங்கள் மகனைத்
தூங்க வைத்துவிட்டார்கள்
தாய்மார்கள்
நாங்கள் யாரும்
கோரிக்கை வைக்காமலே
அரசு மரியாதையளித்த
தமிழ்நாட்டு முதலமைச்சர்
விஜய் அவர்களுக்கு
எங்கள் மண்ணின் நன்றி
துணையிருந்த தோழர்களை
என்னால் மறக்க முடியாது
மாண்புமிகு அமைச்சர்கள்
நிர்மல் குமார், வன்னியரசு
ஆட்சியர் வைத்தியநாதன்,
காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன்,
கண்காணிப்பாளர் சினேகப்பிரியா,
செந்தமிழன் சீமான்
மற்றும்
காலம் தூரம் பாராமல் ஓடிவந்த
கலைக் குடும்பத்தார்
அனைத்துக் கட்சித் தலைவர்கள்
இந்நாள் முன்னாள்
நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள்
சந்திரசேகர் ஐ.பி.எஸ்
சிவனாண்டி ஐ.பி.எஸ்
ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ்
தொழிலதிபர் வணங்காமுடி,
வெற்றி திரையரங்குகளின்
உரிமையாளர்
மதுரை ஐ.வெற்றிவேல்,
கல்வியாளர்
திண்டுக்கல் ரத்தினம்,
வசந்தபவன் ரவி,
பொறியாளர் பழனியப்பன்
போன்ற
நட்பு வட்டாரங்களுக்கும்
வெற்றித் தமிழர் பேரவை
உறவுகளுக்கும் நன்றி
அஞ்சலியில் விழுந்த
ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்
நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்
இறுதி மரியாதையை
ராஜ மரியாதையாக்கிய
காவல் துறைக்கு
ஒரு கைகூப்பு
ஊடக நண்பர்கள்
அத்துணை பேருக்கும்
எங்கள் தலை வணக்கம்
ஓய்வுகொள் இமயமே!
உன் அடக்கம் முடிந்த
அதே தருணம்
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசிச்
சிறு தூறலிட்டுச் சென்றது
ஏன் தெரியுமா?
உன் குழியில் தள்ளப்பட்ட
பச்சை மண்ணிலிருந்து
உனக்கு
மண்வாசனை வீசத்தான்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.