பாக்யராஜ் மறைவுக்கு இயக்குனர் சேரன் தனது இரங்கலை தெரிவித்தார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமானார்.
திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் முத்திரையைப் பதித்த பாக்யராஜ் பாக்யா என்ற இதழை தொடங்கி, அதன் ஆசிரியராக 20 ஆண்டுகளாக பணியாற்றினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், ‘ஒரு கை ஓசை’ படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார். ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். பாரதிராஜாவுடன் இணைந்து இவர் பணியாற்றிய ‘ஒரு கைதியின் டைரி’ படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் இந்தி பதிப்பில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை பாக்யராஜ் இயக்கினார்.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் சேரன் தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக “திரைக்கதை ஆசிரியர்களுக்கு நமக்கு பாதைகளை போட்டு கொடுத்தவர். பல பேருக்கு எடுத்து காட்டாக இருந்தவர். எழுத்தாளர் சங்கத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்டார். அவரது மறைவை எதிர்பார்க்கவில்லை. பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட இரண்டு பிதாமகன்களை அடுத்ததடுது இழந்து உள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கல்” என்றார்.
அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளை (28-06-2026) காலை 9 மணிக்கு இயக்குநர் பாக்கியராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பின்னர் அவரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.