சினிமா செய்திகள்

தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம் - லதா ரஜினிகாந்த் பேச்சு

ரஜினி முதல்-அமைச்சராகி வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என தோன்றுகிறது என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 90களிலிருந்தே கோரிக்கை வைத்து வந்தனர். அவரும் 96 தேர்தலில் திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுக்க; அந்தக் கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. அவரது குரலுக்கே பெரிய வெற்றி கிடைத்ததால் அவர் நேரடியாக அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். அவரும் இதோ வருவேன், அதோ வருவேன் என்று போக்கு காட்டிக்கொண்டிருந்தார்.

அரசியலுக்கு வருவது உறுதி

ஒருவழியாக கடந்த 2017ஆம் ஆண்டு தனது ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து, 'சிஸ்டத்தை மொத்தமாக மாற்ற வேண்டும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இப்போது விட்டால் எப்போதும் முடியாது. எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்' என கூறினார். இதனால் சூப்பர் ஸ்டாரின் பேன்ஸ் எல்லோரும் ஆனந்த கண்ணீர் விட்டு உற்சாகமடைந்தார்கள். ஒருபடி மேலே போய் அவர்தான் அடுத்த சி.எம் என்றும் புகழ்ந்து போஸ்டர்களை ஒட்டியதும் நினைவுகூரத்தக்கது.

விஜய் முதல்-அமைச்சர்

ஆனால் அந்த அறிவிப்பு வெளியிட்ட சில மாதங்களிலேயே அவர் பின்வாங்கி விட்டார். அதேசமயம் விஜய் கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே தேர்தலை சந்தித்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகிவிட்டார். அதை பார்த்து ரஜினி ரசிகர்களோ ரத்த கண்ணீர்தான் வடிக்கிறார்கள். விஜய் இருக்கும் இடத்தில் ரஜினி இருந்திருக்க வேண்டியது என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள். ரஜினியும் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'நான் 2021ல் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன்' என்று ஆதங்கத்துடன் கூறினார். ஒருவேளை கமல்ஹாசன் முதல்-அமைச்சராகி இருந்திருந்தால் நான் பொறாமை பட்டு இருப்பேன் என்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர்,

லீ குவான் யூ

"ரஜினிகாந்த் பெரிய தலைவர். அது மிகப்பெரிய மிஸ் (2021ல் வராதது). நான் கொஞ்சம் பேட் ஆக பீல் செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக இல்லை. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என தோன்றுகிறது. ஏனெனில் அவருக்குள் பல திட்டங்கள் இருந்தன. நிறைய கனவுகள் இருந்தன. அதனால்தான் வரவில்லை. ஆனால் கெடுவாய்ப்பாக கோவிட் காலத்தில் அப்படி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருந்தார்.

லீ குவான் யூ செய்தது மாதிரி செய்ய வேண்டும் என நினைத்திருந்தார். அவரது விஷனை நான் அறிவேன். தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்துவிட்டோம்" என்றார்.