சினிமா செய்திகள்

‘பாண்ட் உலகத்திற்கு வரவேற்கிறேன்’ - ராபர்ட் பேட்டின்சனுக்கு மூத்த நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் வாழ்த்து

நடிகர் ராபர்ட் பேட்டின்சன், 7-வது ஜேம்ஸ் பாண்ட் நடிகராக அவதாரம் எடுக்க உள்ளார்.

வாஷிங்டன்,

பியர்ஸ் பிராஸ்னன் 1995 முதல் 2002 வரை 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்

இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு 'டாக்டர் நோ' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.

அன்று முதல் கடைசியாக கடந்த 2021-ல் வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படம் வரை, மொத்தம் 25 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசை திரைப்படங்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களும், பெரும் புகழ் அடைந்து விடுகின்றனர். சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார். பியர்ஸ் பிராஸ்னன் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் ஆக வலம் வந்தார்.

கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து விலகினார். எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட்

இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, நடிகர் ராபர்ட் பேட்டின்சன், 7-வது ஜேம்ஸ் பாண்ட் நடிகராக அவதாரம் எடுக்க உள்ளார். இவர் 'டிவைலைட்’, 'தி பேட்மேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவராவார்.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை 'அரைவல்', 'டியூன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய டெனிஸ் வில்லெனிவ் இயக்குகிறார். இது தொடர்பாக நடிகர் ராபர்ட் பேட்டின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட் 007' கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவம். எனது கனவு நனவானது போல் உள்ளது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

பியர்ஸ் பிராஸ்னன்

இந்நிலையில், மூத்த பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் தற்போது பாண்ட் நடிகராக தேர்வாகியிருக்கும் ராபர்ட் பேட்டின்சனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அன்புள்ள ராபர்ட், பாண்ட் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நீங்கள் அற்புதமாக செயல்படப் போகிறீர்கள்.

'ரிமெம்பர் மீ'(Remember Me) படத்தை உருவாக்கும்போது நாம் ஒன்றாக இருந்த காலத்தின் இனிய நினைவுகள் எனக்கு உண்டு. நீங்கள் மேலும் மேலும் சிறந்த படைப்புகளில் நடித்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணத்தை அனுபவித்து மகிழுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

2010-ம் ஆண்டு வெளியான 'ரிமெம்பர் மீ' படத்தில் பியர்ஸ் பிராஸ்னன் மற்றும் ராபர்ட் மேட்டின்சன் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் 1995 முதல் 2002 வரை 'கோல்டன்ஐ'(Golden Eye), 'டுமாரோ நெவர் டைஸ்'(Tomorrow Never Dies), 'தி வேர்ல்ட் இஸ் நாட் எனப்'(The World Is Not Enough), மற்றும் 'டை அனதர் டே'(Die Another Day) ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT