தமிழில் 'ஆடுகளம்' என்ற படத்தில் அறிமுகமாகி பிரபல கதாநாயகியாக உயர்ந்தார் டாப்சி பன்னு. பின்னர் இந்தியில் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்த நடித்து வருகிறார். டாப்சியின் படங்கள் நல்ல வசூல் பார்த்து வருவதால் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறார். இவர் வெளிநாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழும் கங்கனா ரணாவத் - டாப்சி இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படுகிறது. பட விழாக்களில் இருவரும் பாராமுகமாகவே செல்வது, பேசிக்கொள்ளாமல் இருப்பது, முகத்தை திருப்பிக் கொண்டு போவது போன்ற செயல்பாடுகள் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்சியிடம், 'அப்படி என்னதான் உங் களுக்கும் கங்கனாவுக்கும் சண்டை?' என்று கேட்கப்பட்டது. இதற்கு டாப்சி கூறும்போது, "நாங்கள் சண்டை போட்டோம் என்று யார் சொன்னது? யாராவது பார்த்தார்களா? கங்கனாவின் சகோதரிதான் என்னை சீண்டி பார்த்தார். ஆனாலும் என் தரப்பில் இருந்து எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஒரு வார்த்தை கூட நான் கங்கனாவை தவறாக பேசியதில்லை. இதை சண்டை என்று இஷ்டத்துக்கு பேசுவோருக்கு, அதனால் சந்தோஷம் கிடைக்கும் என்றால் அதை செய்யட்டுமே...”, என்று சிரித்தபடி பதிலளித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல், 'சீப் காப்பி' என்று டாப்சியை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.