சினிமா செய்திகள்

'தி ஒன்' பட்டத்தின் அர்த்தம் என்ன? - விளக்கம் அளித்த நடிகர் சூர்யா

ஐதராபாத்தில் நடைபெற்ற 'சீன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசினார்.

ஐதராபாத்,

'தி ஒன்' என்பது நம் அனைவரையும் குறிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அது 'தி ஒன்' ஆகிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். பல ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் இந்த அன்பு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.

'சீன்' திரைப்படம்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற 6-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியாகும் 3-வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜீத்து மாதவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'சீன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த ஆண்டு தனக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளதாகவும், ஒரே ஆண்டில் 3 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பு 'மாயாவி', 'கஜினி', 'ஆறு' ஆகிய திரைப்படங்கள் ஒரே ஆண்டில் வெளியானதை நினைவுகூர்ந்தார். ஒவ்வொரு முறையும் தனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கணிக்க முடியாத வகையில் புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.

'தி ஒன்' பட்டம் வேண்டுமா?

ரசிகர்கள் எனக்கு 'தி ஒன்' என்று பட்டம் தந்திருக்கிறார்கள். அது வேண்டுமா? அதை நான் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவேண்டுமா? என்று ரசிகர்களிடமே கேட்கிறேன். ஏனெனில் நான் பட்டங்களை விரும்புவது கிடையாது. ரசிகர்களுக்காக மட்டுமே அதனை ஏற்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

'தி ஒன்' என்றால் நாம் அனைவரும் ஒன்றே!

இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற 'சீன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, 'தி ஒன்' என்ற பட்டத்தின் உண்மையான அர்த்தம் குறித்து விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, "'தி ஒன்' என்ற பெயருக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு என்னவென்றால், நான் மட்டுமே 'தி ஒன்' கிடையாது. நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதால்தான் இந்தப் பெயர் உருவாகிறது. அதாவது, நாம் அனைவரும் ஒன்றே. இதை என்னுடைய பெயராகவோ அல்லது எனக்கான அடைமொழியாகவோ நான் பார்க்கவில்லை. 'தி ஒன்' என்பது நம் அனைவரையும் குறிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அது 'தி ஒன்' ஆகிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். பல ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் இந்த அன்பு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது" என்று தெரிவித்தார். சூர்யாவின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT