சினிமா செய்திகள்

60 வயதில் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?- நடிகை ராக்கி குல்சார்

வயது என்பது ஒருவரின் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது என நடிகை ராக்கி குல்சார் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், தனது தனிப்பட்ட வாழ்க்கையால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 61 வயதான அமீர்கான், ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து பின்னர் இரு மனைவிகளிடமிருந்தும் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது அவர் தனது காதலியான கவுரி ஸ்ப்ராட் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அமீர்கான் மற்றும் கவுரி ஸ்ப்ராட் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல்கள் பரவின. தற்போது அந்த தகவல்கள் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 5-ல் எளிமையான திருமணம்?

தகவல்களின்படி, வரும் ஜூலை 5-ஆம் தேதி அமீர்கான் மற்றும் கவுரி ஸ்ப்ராட் ஆகியோரின் திருமணம் பதிவு திருமண முறையில் எளிமையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமீர்கானின் நெருங்கிய நண்பர்களான சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவுரி ஸ்ப்ராட் யார்?

பெங்களூருவை சேர்ந்த கவுரி ஸ்ப்ராட், லண்டனில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை தொடர்பான படிப்பை முடித்துள்ளார். தற்போது மும்பையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன், அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.

விமர்சனங்களுக்கு பதிலடி

60 வயதை கடந்த பிறகும் அமீர்கான் திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவல்களுக்கு சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்த பாலிவுட் மூத்த நடிகை ராக்கி குல்சார், “60 வயதில் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? வயது என்பது ஒருவரின் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது. விவாகரத்திற்குப் பிறகும் தனது முன்னாள் மனைவிகளுடன் அமீர்கான் நல்ல நட்புறவை பேணி வருவது அவரது சிறந்த குணத்தை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமீர்கானின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.