சினிமா செய்திகள்

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்? - ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில்

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது நினைத்ததை விட மிகவும் கடினமாக உள்ளது என சமந்தா தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார்.

கர்ப்பமாக இருக்கும் சமந்தா

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான சமந்தா, கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் வெளியான ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை சமந்தா அறிவித்தார். குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி

இதற்கிடையில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்ட்ரென்த் டிரெய்னிங் செய்து வருவதாகவும், தனது மருத்துவரின் முன் அனுமதியுடனும், கர்ப்ப காலப் பயிற்சிகளில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடனும் மட்டுமே உடற்பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும், உடலமைப்பும் மாறுபடும் என்பதால், முறையான பயிற்சியாளர் மற்றும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் தனது உடற்பயிற்சிகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா அறிவுறுத்தியிருந்தார்.

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்?

இந்த நிலையில், பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, “குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது நினைத்ததை விட மிகவும் கடினமாக உள்ளது; நல்ல பெயர்களை பரிந்துரையுங்கள்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும், கர்ப்ப காலத்தில் இதுவரை 11 கிலோ எடை அதிகரித்துள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். தாய்மைப் பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும், பலத்தையும் அளித்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.