சினிமா செய்திகள்

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது வியாபாரம் போல மாறிவிடும்- காதல் குறித்து தமன்னா பேச்சு

இன்றைய காலத்தில் காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்பதில் பலர் குழப்பமடைகிறார்கள் என தமன்னா தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக 'புருஷன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி படங்களையும் வரிசையாக கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா காதல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “இன்றைய காலத்தில் காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்பதில் பலர் குழப்பமடைகிறார்கள். காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாயம் உள்ளது. எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது, அது ஒரு வியாபாரம் போல மாறிவிடுகிறது” என்றார்.

மேலும், “இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். ஆனால் அந்த உறவுதான் காதலை வரையறுக்கிறது என்று அர்த்தமில்லை. ஒருவரை உண்மையாக நேசிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நம் எண்ணங்களை திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

அத்துடன், “காதல் என்பது ஒரே ஒரு அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது வாழ்க்கையில் பலமுறை நிகழக்கூடிய உணர்வு. அந்த உணர்ச்சி வெளிப்புற காரணிகளால் அல்ல, நம்முள் உருவாகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.