சினிமா செய்திகள்

90 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது இதுதான் கடைசி என நினைத்தேன் - ராஷ்மிகா மந்தனா

ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா நடித்த ‘மைசா’ படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

‘மைசா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது ஒரு காட்சியில் 90 அடி உயரத்தில் இருந்து குதித்தது குறித்து தனது திகில் அனுபவத்தை விவரித்துள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான ‘மைசா’ படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த, கடினமான சூழல்களால் போராளியாக மாறும் அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார் ராஷ்மிகா. உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ராஷ்மிகாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிக அளவில் உள்ளன.

நீருக்கடியில் சண்டைக்காட்சி

‘மைசா’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நீருக்கடியில் சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இதனை படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த காட்சிகளை படமாக்கியபோது ராஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

படத்தின் டீசர் வெளியீடு

ராஷ்மிகாவின் ‘மைசா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ராஷ்மிகாவின் புதிய ஆக்ரோஷமான தோற்றமும், வித்தியாசமான கதாபாத்திரமும் ‘மைசா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முதல் பாடல் வெளியானது

‘மைசா’ படத்தின் முதல் பாடலான ‘ஓ மைசா ரே’ பாடல் தெலுங்கில் வெளியானது. தமிழில் ‘ரத்தவெறி கொண்டிருக்க..’ என விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதிய இப்பாடலை குமரா வக்தேவி பாடியுள்ளார்.

படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

இப்படம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பான் இந்திய மொழிகளில் வெளியாக இருந்த நிலையில், அத்தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கேரளாவில் காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் அதேபோல நீருக்கு அடியில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் நடைபெற்ற படப்பிடிப்பில் ராஷ்மிகா கலந்து கொண்டதும் செய்திகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

90 அடி உயரத்தில் இருந்து குதித்த திகில் அனுபவம்

இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது ஒரு காட்சியில் 90 அடி உயரத்தில் இருந்து குதித்தது குறித்து தனது திகில் அனுபவத்தை விவரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு எப்போதுமே உயரம் மற்றும் பாம்புகள் மீது மிகுந்த பயம் உண்டு அந்த வகையில் ‘மைசா’ படத்திற்காக ஒரு காட்சியில் 90 அடி உயரத்திலிருந்து குதிப்பதற்கு தயாரானேன். எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளாக வயர்கள் உள்ளிட்ட சாதனங்கள் என்னுடன் இணைக்கப்பட்டிருந்தன. அதுவே எனக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சூழலில் சரி இதுதான் கடைசி என்று நான் நினைத்தேன். அங்கிருந்து குதித்த போது இங்கிருந்து அங்கு வரை எல்லாம் ஸ்லோமோஷனில் நடப்பது போல தோன்றியது. பாதுகாப்பாக கீழே வந்த பின்னரும் அதிர்ச்சியில் நடுங்கியபடி கண்ணீர் விட்டேன்” என்று ராஷ்மிகா மந்தனா ராஷ்மிகா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT